அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஷாஜகான் ஆய்வு


அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஷாஜகான் ஆய்வு
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளதாக எழுந்த புகாரின்பேரில் அமைச்சர் ஷாஜகான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காலாப்பட்டு,

புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் லாஸ்பேட்டை அருகே அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடுக்குமாடி கட்டிடங்களில் 615 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு குடிநீர் வினியோகத்துக்காக சுமார் 300 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் குடியிருப்பின் மொட்டை மாடிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும், குடிநீர் தொட்டிகளில் பாசிபிடித்தும், சில தொட்டிகளில் அழுக்கு படர்ந்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரச்சினைகள் எழுந்தன.

அது குறித்து அந்த குடியிருப்பு பகுதிகளில் வசித்து அரசு ஊழியர்கள் தொகுதி எம்.எல்.ஏ.யும், அமைச்சருமான ஷாஜகானிடம் புகார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நேற்றுக் காலை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சில அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மொட்டை மாடிகளுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை பார்வையிட்டார். அப்போது பல குடிநீர் தொட்டிகளுக்கு மேல் மூடிகள் இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பில்லாமலும் இருப்பதைக் கண்டார்.

தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் முடியில்லாத அனைத்து குடிநீர் தொட்டிகளுக்கும் உடனே மூடிபோட உத்தரவிட்டார்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் பக்கவாட்டு சுவர்களில் சிறுசிறு செடிகள் முளைத்திருப்பதையும் பார்த்த அவர், அவற்றை உடனடியாக அகற்றவும், அந்த குடியிருப்பு பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சருடன் அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலர் உடன் சென்றனர்.


Next Story