கவர்னர் கிரண்பெடி டெல்லியில் முகாம் ராஜ்நாத் சிங்குடன் நாராயணசாமி சந்திப்பு
புதுவை கவர்னர், கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முதல்–அமைச்சர் நாராயணசாமி உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,
புதுவை தலைமை செயலாளர் மாற்றம், கவர்னர் பதவி நீட்டிப்பு வழங்க மறுத்த வாரிய தலைவர்களுக்கு காலநீட்டிப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது போன்ற பரபரப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் கிரண்பெடி டெல்லி சென்றுள்ளார்.
அவர் டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னாள் மாணவர்களுக்கான விருதை வழங்கினார். அவர்கள் மத்திய மந்திரிகள் சிலரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அவர் புதுவை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இதேபோல் முதல்–அமைச்சர் நாராயணசாமியும் டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது புதுவை வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் புதுவை விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக புதுவை அரசு எடுத்த கொள்கை முடிவு தொடர்பான கோப்புகளை கவர்னர் கிரண்பெடி மாநில அமைச்சரவையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், அந்த கோப்புக்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
மேலும் துறைமுக விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அவர்கள் உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தாவையும் சந்தித்து பேசினார்கள். முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.