குதிரைவாலி அரிசி விலை கடும் வீழ்ச்சி அரசு கொள்முதல் மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
குதிரைவாலி அரிசி விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டதினால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் மானாவாரி பயிர்களுக்கு அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி பகுதியில் உள்ள விளை நிலங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக தான் உள்ளது. எனவே இந்த பகுதி விவசாயிகள் பருவமழையை மட்டும் நம்பி உள்ளனர். ஆடிப்பட்டத்தில் இந்தப் பகுதி விவசாயிகள் குதிரைவாலி, சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் குதிரைவாலி சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது குதிரைவாலி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு குவிண்டால் குதிரைவாலி அரிசி ரூ.3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.1300 விற்கப்படுகிறது.
இந்த திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பெரும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர். மேலும் குதிரைவாலி அறுவடை செய்யும் நேரத்தில் விலை குறைந்துள்ளது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது:– இந்த விலை வீழ்ச்சியினால் ஒவ்வொரு விவசாயியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். குதிரைவாலி பயிரை சாகுபடி செய்தால் நல்ல விலை கிடைக்கும் என நம்பி ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்து, குதிரைவாலியை உற்பத்தி செய்தோம்.
ஆனால் அதை விற்க சென்றால் மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். தற்போது விற்கும் விலை தொடர்ந்தால் குதிரைவாலி கதிரை அறுவடை செய்யும் கூலி கூட தர இயலாது. இதனால் பல விவசாயிகள் முதிர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள குதிரைவாலி கதிர்களை அறுவடை செய்யக்கூட தயக்கம் காட்டி வருகின்றனர், காரணம் அறுவடை செய்து விற்றால் அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கூலி கூட கொடுக்க முடியாமல் போய்விடும் என்ற பயம் தான்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு வியாபாரிகள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். எனவே தான் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு ஆளாகி வருன்றனர். எனவே மானாவாரி பயிர்களான குதிரைவாலி, கம்பு, சோளம் போன்றவைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கான கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். அரசு இதை உடனடியாக செய்தால் விவசாயிகள் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும். எனவே அரசு விரைவில் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.