மாவட்டம் முழுவதும் மழை: 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 10 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த 29–ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கடலோர தாலுகாக்களில் பெய்த அளவுக்கு மற்ற தாலுகாக்களில் மழை பெய்யவில்லை. இதனால் விருத்தாசலம் பகுதியில் குளங்கள் இன்னும் நிரம்பவில்லை. ஆனால் சிதம்பரம் பகுதியில் குளங்களுக்கு தண்ணீர் வரத்து உள்ளதால் குளங்களில் தண்ணீர் பெருகிக்கொண்டு இருக்கிறது.
டெல்டா பகுதியான குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்து வருகிறார்கள். இப்பகுதியில் நாற்று விட்டு வளர்த்து, நடுவை செய்வதற்கு நாட்கள் பிடிக்கும் எனபதால் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.
கடந்த 7 நாட்களாக பெய்த மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குமராட்சி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் 10 ஆயிரம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை குறைந்திருந்ததால் வயலில் தேங்கிய தண்ணீர் வடிந்து விடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் நல்ல மழை பெய்து வருவதால் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. அதனால் அப்பகுதிகளில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன. தண்ணீர் வடியவில்லையெனில் பயிர்கள் அழுகும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலையில் முழ்கி உள்ளனர்.
வீராணம் ஏரிக்கு மேற்கு பகுதியில் உள்ள மணவாய்க்கால், கான்சாகிப் வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் தூர்வாரியிருந்தனர். வாய்க்கால்களில் தூர்வாரும் போது அகற்றிய மண்ணை போட்டு கரைகளை உயர்த்தி உள்ளனர். இதனால் வயலில் தேங்கிய தண்ணீர் வெளியேற முடியாததால், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன. இதனால் கரைகளை வெட்டி குழாய் பதித்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுப்பணித்துறையினர் அந்த வாய்க்கால்களின் கரைகளை உயர்த்தும் போது, வயல் தண்ணீர் வாய்க்காலில் வடிவதற்கு ஏதுவாக குழாய்கள் அமைத்திருந்தால், அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனால் வீராணம் ஏரிக்கு கீழ் பகுதியில் உள்ள 28 மதகுகளின் கீழ் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், அப்பகுதியில் விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு செய்திருந்த வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுபற்றி வடரெட்டையைச்சேர்ந்த விவசாயி முத்துகுமாரசாமி கூறியதாவது:–
வீராணம் ஏரியையும், வீராணம் ஏரியின் மேற்குப்பகுதியில் உள்ள வாய்க்கால்களையும் தூர்வாரினார்களே தவிர, கிழக்குப்பகுதியில் உள்ள 28 வாய்க்கால்களையும் தூர்வாரவில்லை. அதனால் அந்த பகுதியில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாததால், பயிர்கள் மூழ்கி கிடக்கிறது. நான் 20 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தேன். பல விவசாயிகள் ஒற்றை நெல்நாற்று நடவு செய்திருந்தனர். இன்னும் பலர் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து நெல்நாற்று வாங்கிக்கொண்டு வந்து நடவு செய்திருந்தனர்.
5 நாட்களாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால் அழுகியிருக்கும். தண்ணீர் வடிந்த பிறகு தான் எவ்வளவு அழுகியிருக்கிறது என்பது தெரியவரும். ஆனால் தண்ணீர் வடியவாய்ப்பு இல்லாமல் மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறதே. எனவே நாற்றுகள் பிழைக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு விவசாயியும் நகைகளை அடகு வைத்து ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தனர். அனைத்தும் நஷ்டமாகி விட்டது. எனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.