வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்தனர்


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்தனர்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் போலீஸ்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்,


பெரம்பலூர் மாவட்ட போலீஸ்துறை சார்பில் வட கிழக்கு பருவமழையையொட்டி மழை வெள்ளம் போன்ற பேரிடரை எதிர்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாவுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்கால பேரிடர் மீட்பு பணி பற்றி பயிற்சி பெற்ற போலீசார் உரிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய போலீஸ் கட்டுப்பாட்டுஅறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வெள்ளத்தில் சிக்கியவர்களை உரிய இடத்தில் தங்க வைப்பது, அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவது உள்ளிட்டவற்றை போலீசார் மேற்கொள்வர். மேலும் மழைவெள்ள இடர்பாடுகள் பற்றி தகவல் தெரிவிக்க 04328- 224910 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் தெரிவித்தார். மழைவெள்ளம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்ட திருமாந்துறை, பிரம்மதேசம், எளம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மக்களை தங்கவைக்க 29 மையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கக்கூடியவையாக 29 கிராமங்கள் கண்டறியப்பட்டு தொடர்ந்து போலீஸ்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிக்காக 18 போலீசார் கொண்ட 2 குழுக்கள் போதுமான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றனர். மழை வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களை தங்க வைக்க 29 பாதுகாப்பு மையங்கள், அவர்களை அழைத்து செல்ல போலீஸ் வாகனங்கள் உள்ளிட்டவை தயாராக உள்ளன. பேரிடர் சமயத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வழிக்காவல் வாகனம் தயாராக உள்ளது. மழைவெள்ளம் குறித்து தகவல் தெரிவிக்க போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 04329-222106, 9498100705 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் தெரிவித்தார். போலீஸ்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்து தக்க அறிவுரை வழங்கினார். 

Related Tags :
Next Story