திருச்சியில் கந்து வட்டி கொடுமையால் ரெயில்வே ஊழியர் தற்கொலை முயற்சி


திருச்சியில் கந்து வட்டி கொடுமையால் ரெயில்வே ஊழியர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 5 Nov 2017 4:45 AM IST (Updated: 5 Nov 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலைக்கு முயன்றார்.

திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் பசுலுல்லா(வயது 32). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார். பசுலுல்லா இரவு பணி முடிந்து நேற்று காலை வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் கல்லுக்குழி நுழைவு வாயில் அருகே மயங்கி கிடந்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பசுலுல்லா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு பசுலுல்லாவின் உறவினர்களும் , கண்டோன்மெண்ட் போலீசாரும் விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் பசுலுல்லாவிடமும், அவருடைய உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர். பசுலுல்லா குடும்ப கஷ்டத்திற்காக சக ஊழியர்களிடமும், மற்றவர்களிடமும் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.

அவர்களுக்கு அந்த கடன் தொகைக்கு அசலுடன் வட்டியும் சேர்த்து அவர் திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் பசுலுல்லாவுக்கு கடன் கொடுத்தவர்கள், அவர் கடனை திருப்பி தரவில்லை என்று கூறி கந்து வட்டியுடன் சேர்த்து கடன் தொகையை கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் மன உளைச்சலான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்து வட்டி கொடுமை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும், கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். அதன் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்களில் சிலர் ஏன் போலீசில் புகார் கொடுத்தாய்? என்று பசுலுல்லாவையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி சென்றுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பசுலுல்லா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கந்து வட்டி கொடுமைக்கு திருச்சியில் ரெயில்வே ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story