கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல்


கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:00 AM IST (Updated: 5 Nov 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்தவர்களுக்கு இதுவரை ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள இடமாக ஊரக பகுதிகளில் 55 இடங்களும், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 19 இடங்களும் என மொத்தம் 74 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டதன் அடிப்படையில் தற்போது ஊரக பகுதிகளில் 3-ம், நகரப் பகுதிகளில் ஒன்றும் என மொத்தம் 4 பகுதிகளில் மட்டுமே டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. அந்த வகையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 260 நபர் களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு, ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு உயிரிழப்பு ஏதும் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்படவில்லை.

வெள்ளம் பாதிக்கக்கூடிய கிராமங்களாக...

இதேபோல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 47 கிராமங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் விதமாக 307 முதல் பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு, அவர் களுக்கு தீயணைப்புத்துறை மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

67 பாதுகாப்பு மையங்கள்

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைத்திட 67 இடங்களில் பொது நிவாரண மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மையங் களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்துத்துறை அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மனோகரன், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செல்வராஜன், இணை இயக்குனர் (வேளாண்மை) சுதர்சன், துணை இயக்குனர் (சுகா தாரப் பணிகள்) சம்பத் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். 

Next Story