புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 5 Nov 2017 4:30 AM IST (Updated: 5 Nov 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆனால் நேற்று முன்தினம் மழை எதுவும் பெய்யாமல் வெயில் அடித்தது.

இந்நிலையில் நேற்று காலை முதலே புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி, புதுக்கோட்டை, அன்னவாசல், நார்த்தாமலை, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்து இருந்தது. இதனால் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

ஆதனக்கோட்டை-6, பெருங்களூர்-7, புதுக்கோட்டை-2, ஆலங்குடி-13, அறந்தாங்கி-7, ஆயிங்குடி-8, நாகுடி-10, மீமிசல்-12, ஆவுடையார்கோவில்-9, கந்தர்வக்கோட்டை- 6, அன்னவாசல்-3, கீரனூர்-2, மணமேல்குடி-22, கட்டுமாவடி-24, பொன்னமராவதி-3, காரையூர்-6, கீழாநிலை-5. திருமயம்-3. 

Next Story