இன்பமே இன்னும் வா - என்.சி.மோகன்தாஸ்


இன்பமே இன்னும் வா - என்.சி.மோகன்தாஸ்
x
தினத்தந்தி 5 Nov 2017 1:13 PM IST (Updated: 5 Nov 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கடும் உயிர் சேதம் ஏற்படுகிறது.

முன்கதை சுருக்கம்:

மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கடும் உயிர் சேதம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மீடியாவில் பணிபுரியும் சுவீகாவும், மணீசும் அந்த வழியாக காரில் சென்றதால் அவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள். அதில் காயமடைந்த சுவீகா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவளது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா கொலை செய்யப் படுகிறாள். அந்த கொலைக்கு சுவீகாவே காரணம் என்று போலீஸ் சந்தேகம் கொள்கிறது. இதையடுத்து மணீசும், சுவீகாவும் கொலையாளியை பற்றிய விவரங்களை சேகரிக்க களம் இறங்கு கிறார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்துவிட, மெக்கானிக் மாணிக்கமும் விபத்தில் சிக்கி இறக்கிறார். இதற்கிடையே டி.எஸ்.பி. சந்தோஷ் மணீசுடன் சேர்ந்து விசாரணையில் இறங்குகிறார். பழைய காதலனின் நினைவுகளில் மூழ்கியிருந்த சுவீகா திடீரென்று மனம் மாறுகிறாள். மணீசை திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறாள். அவனும் சம்மதிக்கிறான். அந்த நேரத்தில் போனில் அவளது ஆபாச வீடியோ ஒன்று வருகிறது.

“மணீஷ்... ரொம்ப நன்றி!” என்று சுவீகா அவனது கழுத்தைக்கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.

“இந்த முத்தம் எதுக்காம்?”

“பெற்றோர்களின் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க சம்மதித்ததற்கு!”

“அதுதானே முறை..!”

“ஆமாம் மணீஷ்! நான் லூசு. படித்த-சம்பாதிக்கிற செருக்கில் முன்பு எதை பத்தியும் யோசிக்காம இருந்திட்டேன். யோசிக்கும்போது எனக்கே கூசுது. பெற்றோர்கள் எவரும் பிள்ளைகளுக்கு தீங்கு நினைப்பதில்லை. அவர்களின் அன்பும், ஆசீர்வாதமும் நமக்கு ஒரு வரப் பிரசாதம். பிள்ளைகளுக்காக தம் சொத்து-சுகத்தை விட்டுக் கொடுத்து- பசங்களுக்குப் பிடிக்கும் என பார்த்து பார்த்து வாங்கி கொடுத்து வளர்த்தவர்களுக்கு நாம் திருப்பி என்ன செய்கிறோம்?

அலட்சியம். உங்களுக்கு உலகம் தெரியாது. காலத்திற்கேற்ப செயல்பட முடியாது. சும்மா இருங் கள் என்று அடக்குகிறோம். அவமானப்படுத்து கிறோம். அவர்களின் பெயர்-புகழ்-சம்பாத்தியம் எல்லாவற்றையும் அனுபவிப்போம். எந்த தருணத்திலாவது அவர்களை திருப்பி பராமரித்திருக் கிறோமா..?

கல்யாணத்திற்குப் பிறகும், வேலை, கர்ப்பம், பிரசவம், குழந்தை பராமரிப்புன்னு அவர்களை வதைக்கிறோம். வயதிற்கேற்ப களைப்பும், தளர்ச்சியும் அவர்களுக்கு இருக்குமே என பாரத்தை குறைத்து அவர்களை பாதுகாப்பதில்லை. மேலும் மேலும் நம் தேவைகள்- நம் சொகுசு என அவர்களை கஷ்டப்படுத்துகிறோம்!” என்று விம்மினாள்.

“சுவீகா என்னாச்சு உனக்கு.. அழறியா..?”

“ஆமாம்” என்று மூக்குறுஞ்சினாள். “பட் ஐ ஆம் ஹாப்பி டுடே! நாம் இருவரும் இந்த வீக் எண்ட் ஊருக்குப் போவோம். அப்பாவை பார்ப்போம். அவர் நிச்சயம் மறுக்க மாட்டார்”

“அதுக்கு வீக் எண்ட் எதுக்கு.. நாம லீவுலதானே இருக்கோம். இப்பவே வேணும்னாலும் கிளம்பலாம்!”

“தாங்க்ஸ்டா!” என்று அவனை இன்னமும் இறுக்கிக்கொண்டு மூச்சுமுட்ட வைத்தாள்.

“இல்லாட்டி அப்பாவை இங்கே வரச் சொல்வோம்!”

“சுவீகா.. உன் செல் சிணுங்குது. வாட்ஸ் அப் மெஸேஜ்ன்னு தோணுது!”

“அது கிடக்கு கழுதை! இந்த இன்பம்.. இந்த சுகம்.. எனக்கு எப்பவும் வேண்டும். தருவியா..?”

“நிச்சயமா.. ஆனா இப்போ கொஞ்சம் விட்டுப்பிடி.. எனக்கு மூச்சு முட்டுது..”

“முடியாது!” என்று மேலும் இறுக்கினாள்.

“மணீஷ் நான் இப்போ சந்தோஷமா இருக்கேன். ஒரு ஜோக் சொல்லேன்!”

“அதான் ஏற்கனவே சந்தோஷமா இருக்கியே.. அப்புறம் எதுக்கு இன்னும்..?”

“உதைப்பேன். சொல்லு... சொல்லு...!”

“யம்மாடி.. இரு. யோசிச்சு.. ஆங்! ஒரு ஸ்கூல். விஷமக்கார பையன் ஒருத்தன் நண்பனிடம் ஒரு யோசனை சொல்லி, ‘நீ இதை செக் பண்ணிப்பாரு.. கை மேல பலன் கிடைக்கும்னான்.

உடனே அவன் அதை பரிசீலிக்க, வாத்தியாரிடம் போய், ‘சார் எனக்கு உங்க ரகசியம் எல்லாம் தெரியும்!’ என்றான். உடன் அவர் சுதாகரித்து, வியர்த்து.. ‘ஏய்.. ஏய்.. இங்கேவா’ என்று அவனை தனியாய் அழைத்து ‘யார் கிட்டேயும் சொல்லிராதடா என் மானம் போயிரும்ன்னு சொல்லி 100 ரூபாய் கொடுத்தார்.

ஆகா.. இது நல்ல வருமானம் போலிருக்கேன்னு, அவனும் செலவுக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஆசிரியர், அண்ணன், அக்கா, அப்பாகிட்டே எல்லாம் இந்த அஸ்திரத்தை பிரயோகித்து நிறைய பாக்கெட் மணி பெற்றான்.

ஒருநாள் ஸ்கூலிலிருந்து மதியம் வீட்டுக்கு வந்த போது போஸ்ட்மேன் தென்பட, இன்னைக்கு இவரை மாட்டிவிடுவோம்ன்னு, ‘சார்.. என்னை சின்ன பையன்.. எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா.. உங்க ரகசியம் எல்லாம் எனக்குத் தெரியும்னு’ சொன்னான்.

உடனே அவர் அரண்டு போய், ‘கண்ணு.. ராஜா..’ என்று அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சினார். கெஞ்சினார்.

‘உனக்கு என் சொத்தில் ஒரு பங்கை எழுதி வைக்கிறேன். இதை வெளியே யார் கிட்டேயும் சொல்லிடாதே என் செல்ல மகனே!’ என்று கட்டித்தழுவினார். அவன் எதுவும் புரியாமல் பேந்த பேந்த விழித்தான்...” என்று அவன் ஜோக்கை நிறுத்தியபோது, அவளுக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வர..

அதற்குள் அவளது செல்லில் மிஸ்ட் கால் வர, ‘அப்பாவாக இருக்கும்’ என்று அவனை விலக்கிவிட்டு எடுத்து, “சை! விளம்பர கால்” என்று அதை தள்ளிவிட்டு வாட்ஸ் அப் மெசேஜைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அதுவரை துள்ளலும், துடிப்புமாய் இருந்தவளின் முகம் திடீரென கறுப்பதையும், அவளது கண்கள் கலங்கி, கன்னம் சுருங்குவதையும் கவனித்தவன்-

“சுவீ... என்ன..? வாட் மெசேஜ்.. யாருக்கு எதுவும் அசம்பாவிதம்...?”

அவள் பதில் சொல்லாமல் சோபாவில் சரிந்தாள். என்னவாக இருக்கும் என்று வாட்ஸ் ஆப்பில் வந்திருந்த அந்த வீடியோ கிளிப்பை ஆன் பண்ணினவன், “ஆ..” என்று செல்லை கீழே தவறவிட்டான்!

“சுவீ... யார்..? எந்த அயோக்கியனோட வேலை இது..?”

அவள் ஸ்தம்பித்து அமர்ந்திருக்க, “சுவீ.. யூ டோண்ட் ஒர்ரி! எந்த நாயாயிருந்தாலும் சரி நான் கண்டுபிடிக்கிறேன். கண்டுபிடிச்சு.. கண்டம் துண்டமா...”

“மணீஷ்... நான் ராசி இல்லாதவள்” என்று சுவீகா தன் மண்டையில் அடித்துக்கொண்டு அழ, ஓடிப்போய் தடுத்தான்.

“சுவீ! வாட் நான்ஸென்ஸ்! படிச்ச பொண்ணு! பிரிலியண்ட் போல்ட்ன்னு நினைச்சேன்!”

“ஆமா! எல்லாம் இருந்தும் என்ன பலன். இப்படி சந்தி சிரிக்குதே!”

“இல்லை.. கூல்.. கூல்.. நான் சொல்றதைக் கேள். இது வேறு எவருக்கும் அனுப்பப்படலைன்னு நினைக்கிறேன். ஜஸ்ட் எ வார்னிங்”

“எதுக்கு வார்னிங்.. அதுவும் எனக்கு...?”

“யோசிப்போம். கண்டுபிடிப்போம். எவன் - எப்போ - எப்படி எதற்காக - யாருக்காக இதை எடுத்தான்.. எதற்காக இதை இப்போ அனுப்பறான்னு அலசுவோம்..”

“அலசி..? மானம் போன பின் அலசி இனி என்னச் செய்யப் போகிறோம்! நான் கொடுப்பினை இல்லாதவள். பாவி, யார் மேலேயும் அதிகமா அன்பு வெச்சிடக்கூடாது. யாரையும் நேசிக்கக் கூடாது! எதுவும் எனக்கு கிடையாது. கிடைக்காது!”

“சுவீ.. சொன்னாக் கேள்! ஒரு நிமிஷம்..” என்று செல்லை எடுத்தான்.

“யாரை கூப்பிடறே இப்போ..?”

“சந்தோஷ் சார்”

“அவர் எதுக்கு? அவரும் என் நிர்வாணத்தைப் பார்க்கணுமா.. பார்த்து என்னப் பண்ணப் போறார்?”

“கொஞ்சம் அமைதியா இரு. அவர் அனுபவஸ்தர். இது மாதிரி பல கேஸ்கள் கேன்டில் பண்ணி யிருப்பார்!”

அதற்குள் ரிங் போக, “சார்.. இப்போ சுவீகா வீடு வரை வர முடியுமா.. அவசரம்!” என்று வைத்தான்.

அதற்குள் திரும்பவும் வாட்ஸ் ஆப்!

அவள் செல்லை எடுக்காமல் முறைக்க, மணீஷ் எடுத்துப் பார்க்க - அதே நம்பர். பெயரில்லை. ‘எச்சரிக்கை. அவரவர் வேலையை அவரவர்கள் பார்த்தல் நலம். வீணாய் பிறர் விஷயத்தில் தலையிட்டால் இந்த வீடியோ.. வைரலாகும்!’ என்றிருந்தது.

அவள் விரக்தியுடன் பார்க்க, “அவனேதான். இது உனக்கான தாக்குதல் தான். எதிராளி உன்னைதான் குறி வைத்திருக்கிறான். அசிங்கப்படுத்தும் அளவிற்கு உனக்கு எதிரி யார்...?”

சுவீகா “ப்ச்” என்று பாத்ரூமிற்குள் ஓடி மறைந்தாள்.

திருச்சி மாநகரம்.

டவுனை விஸ்தீகரிக்க முடியாத நெருக்கடி, நீரின்மை, உஷ்ணம், போதுமான தொழிற்சாலைகள் இன்மை என்றிருந்தாலும், பள்ளி-கல்லூரி, ஓட்டல், மலைக்கோட்டை என எப்போதும் ஜனத்திரளுக்கு பஞ்சமின்மை.

கலெக்டர் அலுவலகம். இரைச்சலிலிருந்து சற்று உள்வாங்கியிருந்தாலும் கூட - போதுமான பஸ்கள் இல்லாவிட்டாலும் கூட - சமீப காலங்களில் அங்கும் கும்பலுக்கும், கூக்குரலுக்கும் அளவில்லாமல் ஆகிவிட்டிருந்தது. எப்போதும் ஏதாவது ஒரு கட்சி அல்லது கோஷ்டி கொடி பிடித்து கோஷம்! துணைக்கு மீடியாக்களை அழைத்து வந்துவிடுவார்கள்! மீடியா இருந்தால் தான் அலுவலகங்களில் காரியங்கள் நடக்கும் என்பதை பாமரர்களும் அறிந்து வைத் திருந்தனர்.

அப்போதும் - வாசலில் ஒரு ஆவேசக் கூட்டம். கிராமங்களிலிருந்து அவர்கள் படுக்கையிலிருந்து நேராய் எழுந்து வந்திருக்க வேண்டும். ஒரு பெண் அழுத கண்களோடு சர்ரென உள்ளே நுழைய -

காவலாளி தடுத்து நிறுத்த முடியாமல் அவளுக்கு பின்னாலேயே ஓட, ரிஷப்ஷனில் “யாரும்மா.. நீ என்ன வேணும்?”

“எம் பேரு கதிஜா.. இங்கே யாரோ சுஷ்மாவாமே.. அவங்களை நான் பார்க்கணும்!” என்று இங்கும் அங்கும் நோட்டமிட்டாள்.

“சுஷ்மாவா? யாரது? என்ன செக்‌ஷன்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. அப்படித்தான் சொன்னாங்க!”

“இப்படி வாம்மா. உனக்கு என்ன பிரச்சினை..?”

“பிரச்சினை எனக்கில்லை. கஷ்டப்பட்டு நிலத்தை வித்து பணம் கட்டி குவைத்துக்கு அனுப்பின என் மவன் கமாலுக்குத்தான் பிரச்சினை!”

“அதான் என்னன்னு கேட்டோம்!”

“ஒரு பாவமும் அறியாத அவனை போலீஸ் பிடிச்சு ஜெயில்ல போட்டிருக்காம். போன் வந்தது. அவனை எப்படியாவது அங்கிருந்து விடுவிச்சு என்கிட்டே ஒப்படைச்சிடுங்க”

“இங்கே வாங்க உங்க பிரச்சினையை விவரமா எழுதிக்கொடுங்க. நாங்க உங்க மகனை மீட்பதற்கு ஏற்பாடு பண்றோம்”

அந்த பெண்ணும், உடன் வந்தவர்களும் அமர்த்தப்பட எதிரே தொலைக்காட்சி பெட்டியில், ‘பிளாஷ் நியூஸ்’ ஓட ஆரம்பித்திருந்தது.

“மந்திரி ரத்னாகரை காணவில்லை! இரண்டு நாட்கள் முன்பு தன் தொகுதியில் நடந்த திருமணத்திற்கு சென்றவர் பிறகு ஊர் திரும்பவில்லை!” என்று அவரது மகன் நகிலன் புகார்!

“சி.பி.ஐ. வளையத்துக்குள் சிக்கியுள்ள மந்திரிக்கு என்ன நேர்ந்தது? அவர் கடத்தப்பட்டாரா.. உயிருடன்தான் இருக்கிறாரா.. போலீஸ் தேடுதல் வேட்டை!”

(தொடரும்) 

Next Story