காய்ச்சலால் இளம்பெண் பலி டெங்கு காய்ச்சலால் இறந்ததாக கணவர் புகார்
புதுவண்ணாரப்பேட்டையில் காய்ச்சலால் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலால்தான் அவர் இறந்ததாக அவருடைய கணவர் புகார் தெரிவித்து உள்ளார்.
ராயபுரம்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் அன்ராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கண்மணி(வயது 30). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கண்மணி, கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கண்மணி, சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். கண்மணிக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அதன் தாக்கத்தில் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் தன்னுடைய மனைவி கண்மணி, டெங்கு காய்ச்சலால்தான் இறந்தார் என அவருடைய கணவர் அன்ராஜ் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.