காதல் தோல்வியால் விரக்தி: செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


காதல் தோல்வியால் விரக்தி: செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:30 AM IST (Updated: 6 Nov 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே காதல் தோல்வியால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ள ஆண்டூரணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் ஜோஸ்வா(வயது 22). இவர் ஜே.சி.பி. எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். ஜோஸ்வா, அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவர் வெளிபடுத்தியும், அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். காதல் தோல்வியால் விரக்தியடைந்த ஜோஸ்வா நேற்று அதே ஊரில் உள்ள 150 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறினார். அதன் உச்சிக்கு ஏறிச்சென்ற அவர் மேலே குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் கிராமமக்கள் அந்த இடத்தில் கூடி, அவரை இறங்குமாறு கூறினர். ஆனால் காதலிக்கும் பெண்ணை அழைத்து வந்தால் மட்டுமே இறங்குவேன் என்று தொடர்ந்து அவர் மிரட்டல் விடுத்தார்.

இதனால் கிராமமக்கள் காளையார்கோவில் போலீசார் மற்றும் சிவகங்கை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான படையினர் ஆண்டூரணிக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் வாலிபரிடம் கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினர். ஆனால் அவர் இறங்கவில்லை. இதனையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் பாண்டியராஜன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு ஜோஸ்வா மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து மீட்கப்பட்ட வாலிபர் ஜோஸ்வா மீது காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story