திருவாடானை யூனியனில் டெங்கு தடுப்பு பணிகள் ஆய்வு


திருவாடானை யூனியனில் டெங்கு தடுப்பு பணிகள் ஆய்வு
x
தினத்தந்தி 6 Nov 2017 3:45 AM IST (Updated: 6 Nov 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொண்டி,

திருவாடானை யூனியனில் 47 கிராம ஊராட்சிகளிலும் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மூலம் ஒட்டு மொத்த சுகாதார பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முள்ளிமுனை, குளத்தூர், புதுப்பட்டினம், அரும்பூர், ஆதியூர், திருவெற்றியூர் ஆகிய ஊராட்சிகளில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது அந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துகொள்ளவேண்டும் எனவும், பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்து இருந்தால் அதனை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்றும் வீடுகளை சுற்றி உடைந்த பாத்திரங்கள், பாட்டில்கள், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் போன்றவைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தால் உடனே தண்ணீரை அகற்றுவதுடன் வீடுகளிலும் வீடுகளை சுற்றிலும் கழிவு பொருட்கள் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அனைத்து கிராமங்களிலும் வீடுகள் மற்றும் வீதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக், பாலித்தின் பொருட்களை அகற்றவும், கொசு ஒழிப்பு புகை மருந்துகளை அடிக்கவும், தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றி சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஊராட்சி செயலாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் களப்பணியாளர்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு வீடு வீடாக தீவிர டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அங்குள்ள வீடுகளின் மேல் மாடிகளில் கிடக்கும் கழிவு பொருட்களை அகற்றுவதுடன், மாடிகளில் தண்ணீர் தொட்டிகள் இருந்தால் அதனை மூடி போட்டு மூடி வைக்க வீட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து கடைகளுக்கு சென்று சுற்றுப்புற சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கடை உரிமையாளர்களிடம் கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் விதமாக கடைகளில் கழிவு பொருட்களை வைத்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்டுள்ள பாலித்தின், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

மீறினால் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அவருடன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட களப்பணியாளர்கள் உடன் சென்றனர்.


Next Story