டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்த வீடு, திருமண மண்டப உரிமையாளருக்கு அபராதம்
விழுப்புரத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்த வீடு மற்றும் திருமண மண்டப உரிமையாளருக்கு அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மகாவிஷ்ணு தெரு,மேல்தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று £வட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா என்றும் தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா எனவும் பார்வையிட்டார்.
அப்போது முன்னாள் கவுன்சிலர் ஜோதி என்பவருக்கு சொந்தமான புதிய வீட்டின் வளாகத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் ஜோதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதேபோல் அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த திருமண மண்டவ உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இது தவிர சுகாதாரமற்ற முறையில் இருந்த ஒரு சில வீடுகள் இருந்தது. இதையடுத்து அந்த வீடுகளின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கோட்டாச்சியர் சரஸ்வதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், விழுப்புரம் நகராட்சி ஆணையர் செந்திவேல், நகராட்சி மருத்துவ அலுவலர் ராஜா, பொறியாளர் சுந்தரேசன், தாசில்தார் சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.