குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி–ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூரில் குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி, ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேடசந்தூர்,
வேடசந்தூரில், மாரம்பாடி செல்லும் சாலையின் ஒரு புறத்தில் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 5–வது வார்டு மைனர் காலனி, பாத்திமா நகர் ஆகிய பகுதிகள் உள்ளது. மற்றொரு புறத்தில் தட்டாரப்பட்டி ஊராட்சி வசந்தநகர் உள்ளது. அங்கு சாலையோரத்தில், தட்டாரபட்டி ஊராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பைத்தொட்டியை பேரூராட்சி பகுதி மக்களும், ஊராட்சி பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், குப்பைத்தொட்டி நிரம்பி வழியும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் யாரும் அதை அகற்றவில்லை. இதனால் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. அதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் நீடித்து வருகிறது. குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதற்கு, பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப்பிரச்சினைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
குப்பைத்தொட்டியில் கொட்டப்படும் குப்பையை சீரான இடைவெளியில் அள்ள வேண்டும் என தட்டாரப்பட்டி ஊராட்சி, வேடசந்தூர் பேரூராட்சி பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பா.ஜனதா இளைஞர் அணி ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமையில் குப்பைத்தொட்டி முன்பு திரண்டு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எல்லை பிரச்சினையை தீர்த்து குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.