துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக என்ஜினீயர்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த என்ஜினீயர் தினேசை (வயது 30) சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர் கொண்டு வந்த அலங்கார பொருட்களை பிரித்து பார்த்தபோது அதில் 3 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.10 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த என்ஜினீயர் ராஜேந்திர பாரத்தை (35) அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த அலங்கார பொருட்களில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடை கொண்ட 3 தங்க கட்டிகள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அதேபோல் துபாயில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த தங்கமணியின் (30) உடைமைகளை சோதனை செய்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தன. 3 பேரிடமும் இருந்து 1 கிலோ 50 கிராம் எடை கொண்ட சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.