வானூர் அருகே மதுக்கடையில் பா.ம.க. பிரமுகர் மீது தாக்குதல் கிராம மக்கள் சாலைமறியல்
வானூர் அருகே மதுக்கடையில் பா.ம.க. பிரமுகர் தாக்கப்பட்டார். இதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). பா.ம.க. பிரமுகர். இவர் நேற்று மாலை புதுவை மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் மூர்த்திக்கு காயம் ஏற்பட்டது.
இதை அறிந்த கரசானூர் கிராம மக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள், மூர்த்தியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரி– மயிலம் சாலையில் இரவு 8.30 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி, கிராம மக்களை கலைத்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் தடியடி நடத்தியதால் கரசானூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க. பிரமுகர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.