தலைமை செயலாளர் நேர்மையாகவும், அச்சமின்றியும் பணியாற்ற வேண்டும்; கிரண்பெடி கருத்து
தலைமை செயலாளர் நேர்மையாகவும், அச்சமின்றியும் பணியாற்ற வேண்டுமென கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் தனது கருத்துகளை தினந்தோறும் பதிவிட்டு வருகிறார். புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று தனது சமூக வலைதளத்தில் தலைமை செயலாளர் பதவி தொடர்பாக தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:–
ஒரு மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியில் தலைமைச் செயலாளரின் பங்கு முக்கியமானதாகும். எதிர்கால திட்டமிடுதல், கவனத்துடன் செயலாற்றுதல், ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவை அவரால் தான் ஏற்படுத்த முடியும்.
தலைமைச் செயலாளரின் நேர்மையான பதிவுகள், பணி விதிகள், நிதி செலவின வழிகாட்டுதல்கள், நிர்வாக விதிகள், கொள்கை அடிப்படையில் கூட்டங்களை நடத்தி பதிவு செய்தால் அரசால் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
தனிப்பட்ட நலனுக்கு முக்கியத்துவம் அளித்தால் மாநிலத்தின் நலன் பின்னுக்கு தள்ளப்படும். இதனால் ஒழுக்கமின்மை, நேரம் தவறுதல், புகார்கள், வழக்குகள், ஊழல், நோய், விசாரணை, மனுக்கள் அளித்தல், வளங்களை வீணடித்தல் போன்றவை ஏற்படும். மேலும் வருவாய் இழப்பும் உண்டாகும்.
தலைமை செயலாளர் பதவியில் தகுதியான நபர் இருந்தால் தான் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சாத்தியமாகும். அவர் அரசியல் தலைமைகளின் கீழ் செயல்பட்டாலும் அவர் தான் மூத்த தொழில் ரீதியிலான ஆலோசகர் ஆவார். மேலாண்மையை சரிவர மேற்கொள்ள எதிலும் தலையிட அவருக்கு உரிமை உள்ளது. அனைத்து துறைகளும் அவருக்கு பதில் கூற வேண்டும். மத்திய தணிக்கை துறை, மத்திய கண்காணிப்பு துறை, சி.பி.ஐ., நீதித்துறை போன்றவை தலைமைச் செயலாளரிடம் வரமாட்டார்கள்.
எந்த மாநிலத்திலும் தலைமை செயலாளரே அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறார். வாய்மொழி உத்தரவுகளால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கோப்புகள் மூலம் அனைத்தும் மேற்கொள்ளலாம். நேர்மையான கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மாநில கவர்னர் தவிர ஏனைய பதவியில் இருப்போருக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை. எனவே தலைமை செயலாளர் நேர்மையாகவும், நிபுணத்துவத்துடனும் அச்சமின்றி பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.