நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமே நிரந்தர தீர்வு காணமுடியும்; முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு


நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமே நிரந்தர தீர்வு காணமுடியும்; முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 Nov 2017 5:30 AM IST (Updated: 6 Nov 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலமே நிரந்தர தீர்வு காணமுடியும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு சார்பில் புதுவை மி‌ஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நீட் எதிர்ப்பு விளக்க கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகத்தின் புதுவை மாநில தலைவருமான சிவ.வீரமணி தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ பொழிலன், மீனவர் விடுதலை வேங்கை அமைப்பாளர் மங்கையர்செல்வம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எழிலன், இந்திய மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம் நடத்துவதால் எந்த தீர்வும் காணப்படாது. நீதிமன்றத்தால் தான் நிரந்தர தீர்வை காண முடியும். எனவே நீட் தேர்வுக்கு எதிராக புதுவை அரசு நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளது’ என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், ‘புதுவையில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்–அமைச்சர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர், பிறரை போல குறுக்கு வழியில் வந்தவர் அல்ல. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தேர்வு அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது. புதுவை மற்றும் தமிழகத்தில் டெங்கு தொல்லையை போல் டெல்லி தொல்லையும் உள்ளது.’ என்றார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழக அரசு நீட் தேர்வில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. தமிழக அரசின் கட்சி பிரச்சினைகளை சமாளிப்பதில், மக்கள் பிரச்சினைகளை உதாசீனப்படுத்துகிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்’ என்று கூறினார்.

முன்னதாக சமூக நீதி பேரவை நிர்வாகி தனராமன் வரவேற்றார். முடிவில் மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் நன்றி கூறினார்.


Next Story