பரமத்தி வேலூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை மலர்கள் தூவி வழிபாடு


பரமத்தி வேலூரில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை மலர்கள் தூவி வழிபாடு
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூரில் காவிரி நதிநீரை பாதுகாக்க காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை செய்து, காவிரி ஆற்றில் மலர்கள் தூவி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூர்,

அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி விழிப்புணர்வு ரதயாத்திரை ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும். இதையொட்டி காவிரி நீரை பாதுகாக்க காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் 7-வது ஆண்டாக அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அகிலபாரத துறவியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராமானந்தா சாமி மற்றும் காளஸ்வர மகானந்த சரஸ்வதி சாமி ஆகியோர் தலைமையில் நேற்று பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் தீபம் விட்டும், மலர்கள் தூவியும் வழிபட்டனர்.

முன்னதாக அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி ஆற்றில் சாக்கடை கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு அவசர சட்டம் உருவாக்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க கரைகளை பலப்படுத்தி தடுப்பணைகள் அமைக்க வேண்டும். கங்கையை தூய்மைபடுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியதுபோல் காவிரியையும் தூய்மைபடுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். முதற்கட்டமாக தென்னக நதிகளை காவிரியுடன் இணைக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் ராமனந்த மகராஜ் சாமி, யுக்தேஷ்வரானந்தா சாமி, வித்யாம்பா சரஸ்வதி சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் கிருபானந்தவாரியார் சாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story