2 ஆண்டுகளுக்கு பிறகு கழிஞ்சூர் ஏரி கோடிபோனது ஆடுவெட்டி திருவிழாபோல் கொண்டாடிய மக்கள்


2 ஆண்டுகளுக்கு பிறகு கழிஞ்சூர் ஏரி கோடிபோனது ஆடுவெட்டி திருவிழாபோல் கொண்டாடிய மக்கள்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:30 AM IST (Updated: 6 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

கழிஞ்சூர் ஏரி 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோடிபோனது. இதை பொதுமக்கள் ஆடுவெட்டி திருவிழாபோன்று கொண்டாடினர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 519 ஏரிகளில் இதுவரை 112 ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டிஉள்ளது. 47 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீரும், 59 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும் உள்ளது. 301 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீருடன் வறண்டு கிடக்கிறது.

காட்பாடி கழிஞ்சூர் ஏரி கடந்த 2015-ம் ஆண்டு வார்தா புயல் ஏற்பட்டபோது நிரம்பியது. கடந்த ஆண்டு வறண்டது. இந்த நிலையில் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து விரிஞ்சிபுரத்தை அடுத்த திருமணி பகுதியில் இருந்து கழிஞ்சூர் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை கழிஞ்சூர் பொதுமக்கள் சீரமைத்தனர். இதனால் கழிஞ்சூர் ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது.

நேற்று காலையில் கழிஞ்சூர் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து ஏரி கோடிப்போகும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் கோடிப்போகும் தண்ணீரை வரவேற்க முடிவு செய்தனர். இதற்காக கோடிப்போகும் பகுதியில் மின்விளக்குகள் அமைத்து, மைக்செட் கட்டினர். காலை 10 மணிக்கு மேல் ஏரிகோடிப்போனது.

இதைபார்க்க பொதுமக்கள் திரண்டனர். சிறுவர்கள், இளைஞர்கள் ஏரியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடிப்போகும் தண்ணீரை வரவேற்கவும், ஏரியில் நிரம்பியிருக்கும் தண்ணீரால் உயிர்பலி ஏற்படாமல் இருக்கவும் வேண்டி, கோடிப்போகும் பகுதியில், பொதுமக்கள் ஆடுவெட்டி பலியிட்டனர். இதற்காக கிராம மக்கள் திரண்டுவந்திருந்தனர். இதனால் திருவிழாபோல் காட்சியளித்தது.

கோடிப்போகும் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதனை கலெக்டர் ராமன் பார்வையிட்டார். ஏரி நிரம்பியதால் விருதம்பட்டு, காந்திநகர், காட்பாடி, கழிஞ்சூர், தாராபடவேடு பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story