5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்தது திருச்சி பாதிரியார், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்


5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்தது திருச்சி பாதிரியார், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:45 AM IST (Updated: 6 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாதிரியாரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்து கிறார்கள்.

திருச்சி,

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தவர் கிதியோன் ஜாக்கப். கிறிஸ்தவ பாதிரியாரான இவர், தான் நடத்தி வந்த காப்பகத்தின் மூலம் குழந்தைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழ் எடுத்து அவர்களை கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும், பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

இதுபற்றி மதுரை ஐகோர்ட்டு கிளையில் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அந்த காப்பகத்தை அரசு ஏற்று நடத்த உத்தரவிட்டது. மேலும் இந்த புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாதிரியார் கைது

இந்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் கிதியோன் ஜாக்கப் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்ததால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி ஜெர்மனி நாட்டில் இருந்து கிதியோன் ஜாக்கப் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வந்தனர்.

திருச்சி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிதியோன் ஜாக்கப்பை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி இரண்டாவது கூடுதல் சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி மத்திய சிறையில் இருந்து கிதியோன் ஜாக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று ஆஜர்

மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, சி.பி.ஐ. போலீசார் 5 நாட்கள் கிதியோன் ஜாக்கப்பை தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் 5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்தது. இதையடுத்து கிதியோன் ஜாக்கப்பை சி.பி.ஐ. போலீசார் இன்று(திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.


Related Tags :
Next Story