மழைநீர் வரத்து வாரிகளை தொடர்ந்து தூர்வாரி பராமரிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு


மழைநீர் வரத்து வாரிகளை தொடர்ந்து தூர்வாரி பராமரிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் வரத்து வாரிகளை தொடர்ந்து தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையை நேற்று கலெக்டர் கணேஷ், உதவி கலெக்டர் கே.எம்.சரயு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிமனையில் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் அறை, டயர்கள் சேமித்து வைத்திருக்கும் அறை, பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டெங்கு கொசு உருவாகும் காரணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணிமனையில் கொசு மருந்து அடிக்கும் பணியையும் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கம்பன் நகர், குண்டாறு பாலம், அரசினர் மகளிர் கலை கல்லூரி போன்ற பல்வேறு இடங்களில் உள்ள மழைநீர் வரத்துவாரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அனைத்து பகுதிகளிலும் காலை, மாலை கொசு மருந்து அடிக்கும் பணிகள் மற்றும் தூய்மை பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மழை நீர் தேங்காத வண்ணம் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

டயர்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பராமரிக்க வேண்டும், மழைநீர் வரத்து வாரிகளை தொடர்ந்து தூர்வாரி பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் கே.எம்.சரயு புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர் பகுதியில் உள்ள சந்திரமதி வாய்க்கால் மற்றும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வரத்துவாரியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், தாசில்தார் செந்தமிழ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Next Story