ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை வரலாற்று தேடல் குழுவினர் பார்வையிட்டனர்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை வரலாற்று தேடல் குழுவினர் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை வரலாற்று தேடல் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது கோபுரங்களின் வடிவமைப்பு குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

தமிழகத்தில் சோழர் கால கோவில்கள் அதிகம் உள்ளன. இந்த கோவில்களில் உள்ள சிற்பங்கள், கோபுரங்கள், கட்டிடங்களின் சிறப்புகள் மற்றும் வரலாற்று செய்திகளை இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் வகையில் சோழ மண்டல வரலாற்று தேடல் குழுவினர் மரபு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை முன்னாள் ஆய்வாளர் ராமன் தலைமையில் இக்குழுவினர் நேற்று காலை ஸ்ரீரங்கம் வந்தனர்.

இக்குழுவினர் ராஜகோபுரம், வேணுகோபாலன் சன்னதி, வியூ பாய்ண்ட் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். வேணுகோபாலன் சன்னதியின் வெளிப்புற சுவற்றில் உள்ள சிற்பங்கள் குறித்தும் சன்னதியின் கட்டுமானம் மற்றும் வெள்ளை கோபுரம், ராஜ கோபுரம் வடிவமைப்பு, அதன் வரலாறு குறித்து ராமன் பொதுமக்களுக்கும், குழுவினருக்கும் எடுத்து கூறினார்.

இந்த மரபு நடைபயணம் குறித்து சோழ மண்டல வரலாற்று தேடல் குழுவின் தலைவர் டாக்டர் உதயசங்கர் கூறியதாவது:-

சோழ மண்டல வரலாற்று தேடல் குழு தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைகளை தெரிந்து அந்த செய்திகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வது தான் இந்த குழுவின் நோக்கம். நாங்கள் முதலில் கும்பகோணம் அருகில் உள்ள பழையாறு சோமநாத சுவாமி கோவில், பட்டீஸ்வரம் உள்ளிட்ட சோழர் கால கோவில்களை பார்வையிட்டோம். தொடர்ந்து சிதம்பரத்தில் தில்லை நடராஜர் கோவிலை பார்வையிட்டோம். கோடியக்கரையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் கட்டுமான பணியை பார்வையிட்டு அதை பாதுகாக்கக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருவெள்ளறை கோவிலுக்கு சென்று அங்குள்ள சிற்பங்கள், கட்டிடங்கள், கோபுரங்களை பார்வையிட்டு அவற்றின் சிறப்புகள் குறித்து குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு கூறினோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த மரபு நடைபயணத்தை தஞ்சை தொல்லியல் துறை ஆய்வாளர் செல்வராஜ், சோழமண்டல வரலாற்று தேடல் குழு துணைத்தலைவர் அபிராமி, பொருளாளர் ஆண்டவர்கனி, ஒருங்கிணைப்பாளர் செல்வி அருண்குமார் உள்பட 40 பேர் மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story