பெருந்துறை சிப்காட் துணி பதனிடும் ஆலையில் தொழிலாளி மர்ம சாவு, உறவினர்கள் போராட்டம்
பெருந்துறை சிப்காட் துணி பதனிடும் ஆலையில் வேலை செய்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததால் அவருடைய உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னிமலை,
திருச்சி மாவட்டம் நல்லூர் அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 37). இவருடைய மனைவி யசோதை (33). இவர்களுக்கு யமுனாதேவி (13), காயத்ரி (9) என்ற 2 மகள்களும், ஹரீஸ் (4) என்ற ஒரு மகனும் உள்ளனர். சுப்பிரமணி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிப்காட்டில் உள்ள துணி பதனிடும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி திடீரென மர்மமான முறையில் இறந்தார். தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் சுப்பிரமணி குடும்பத்தினர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தனர். அவர்கள் சுப்பிரமணியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘முறையாக பிரேத பரிசோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
இதில் சமாதானம் அடைந்த சுப்பிரமணியின் குடும்பத்தினர் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து அவருடைய உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு திருச்சிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் பெருந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.