மயானத்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி, சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு


மயானத்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி, சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 7 Nov 2017 3:30 AM IST (Updated: 7 Nov 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

மயானத்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டியில் 7–வது வார்டு மற்றும் 9–வது வார்டு பகுதியில் மயானம் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி பகுதிகளில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவு பொருட்கள் கொட்டப்படுகின்றன. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மயானம் செல்லும் வழியில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

காளியப்பகவுண்டன்புதூரில் கடந்த 2015–ம் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இருதரப்பினரும் கோவில் வளாகத்தில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி இரவு இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் நீண்ட நேரம் பயிற்சி எடுத்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து அவர்களை கண்டித்தனர். ஆனால் மீண்டும் இரவு நேரத்தில் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்பாடுகள் தாசில்தாரின் அமைதி கூட்ட தீர்மானத்திற்கு எதிராக உள்ளது. எனவே சப்–கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கல்வி கடன் பெற்று தரக் கோரி பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றேன். எனது 2 பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். முதல் பெண்ணான மாசிலாமணி கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். படிக்க வைக்க போதுமான பணம் இல்லாததால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்தேன். அவர்களும் தருவதாக கூறி மனுவை பெற்றுக்கொண்டனர். ஆனால் 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் கல்வி கடன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வங்கியில் கேட்டதற்கு வீட்டு பத்திரம் கேட்டனர். அதற்கு நான் நீங்கள் எழுத்து மூலமாக தாருங்கள் நான் பத்திரத்தை தருகிறேன் என்று மனு கொடுத்தேன். ஆனால் இன்னும் அந்த மனுவிற்கு பதிலும் தரவில்லை. கல்வி கடனும் தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே கோவை மாவட்ட கலெக்டர், சப்–கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளேன். மகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே என் மகளுக்கு கல்வி கடனை வங்கியில் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 13–ந்தேதி நானும் எனது மகளுடன் சப்–கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story