பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பட்டா மாறுதல் மனுக்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகம்


பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பட்டா மாறுதல் மனுக்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:00 AM IST (Updated: 7 Nov 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பட்டா மாறுதல் மனுக்களை ஆன்லைனில் பெறும் வசதியை கலெக்டர் ஹரிகரன் தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி நகராட்சியின் நகர நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இந்த சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பொருட்டு அதை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

நில அளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இருப்பதால் பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணைய வழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கவும் நிலப்பதிவேடுகளின் நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் முடியும். இந்த நகல்கள் மின்கையொப்பம் செய்யப்பட்டுள்ளதால் இதனை வங்கி மற்றும் சேவைகளுக்கு சமர்ப்பிக்க யாருடைய ஒப்புதலும் பெற வேண்டாம்.

இனி வருங்காலங்களில் பொதுமக்கள் நகர்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இணைய வழி சேவையின் மூலமாக எளிதாகவும் விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை www.tn.gov.in/eservices என்ற இணைய(ஆன்லைன்) பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இச்சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

மேலும், கோவை மாநகர நகர்ப்புற ஆவணங்களும் மற்றும் நகர்புற பிளாக் வரைபடங்களும் கணினி மூலம் வரைவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரைபடங்களும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையவழி சேவையின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். பொதுமக்கள் குடியிருந்துவரும் மனை, நத்தம் பகுதிகளுக்கான ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நில ஆவணங்கள் விரைவில் இணையவழி சேவைக்கு விரைவில் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், பொள்ளாச்சி சப்–கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவிஇயக்குனர் கோவிந்தசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story