இலவச வீட்டுமனை பட்டா கேட்டு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு பொதுமக்கள் போராட்டம்


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன்பாளையம் அரிஜன காலனியில் 110 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே வீட்டில் 3 குடும்பத்தினர் வரை வசித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் வீடு இல்லாதவர்கள் வீடு கட்டிக்கொள்ள பட்டா இடம் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஆனால் அதன்பிறகும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்குள்ள மந்தை புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் பட்டா கொடுத்த பிறகே இடத்தை காலி செய்வோம் என்று கூறிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை சப்–கலெக்டர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அவர்களிடம் சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் சந்தேககவுண்டன்பாளையத்தில் இடம் இல்லை. வேறு பகுதியில் இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றார்.

ஆனால் சந்தேகவுண்டன்பாளையத்தில் இடம் வேண்டும் என்று கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தொடர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

சந்தேகவுண்டன்பாளையம் அரிஜன காலனியில் 40 குடும்பத்தினர் வசிக்க தான் வசதி உள்ளது. ஆனால் 110 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். ஒரே வீட்டில் 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனவே தொகுப்பு வீடுகள் கட்டி கொள்ள இடம் கேட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று குடிசை போட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது குடிசை அகற்றி கலைந்து செல்லுங்கள். இடம் கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஏற்கனவே கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் கட்டப்பட்டது. இதனால் அனைத்து வீடுகளும் பழுதடைந்து காணப்படுகிறது. வேறு பகுதிகளில் இடம் கொடுப்பதாக கூறுகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே சந்தேகவுண்டன்பாளையத்திலேயே இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:–

சந்தேகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு மந்தை புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் பட்டா கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மந்தை புறம்போக்கு இடம் என்பது கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஒதுக்கப்பட்டதாகும். அந்த இடத்தை பட்டா போட்டு கொடுத்தால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாமல் போய் விடும். போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு வேறு இடங்களில் பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story