அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை


அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2017 3:45 AM IST (Updated: 7 Nov 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

திண்டுக்கல்,

தமிழக சிறைத்துறையில் இருந்து ரெயில்வே போலீஸ் துறைக்கு சமீபத்தில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ரெயில்வே போலீஸ் தொடர்பான பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்கிறார். நேற்று, திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு திடீரென வந்த அவர், ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, போலீசார் பின்பற்றும் ஆவணங்களை பார்வையிட்டார். ஒவ்வொரு போலீசாரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டார். ஆனால், அனைத்து போலீசாரும் தங்களுக்கு குறைகள் எதுவும் இல்லை என்றே தெரிவித்தனர். பிறகு, அர்ப்பணிப்பு உணர்வுடன் போலீசார் பணி செய்ய வேண்டும் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.

அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அதற்கு அவர், தான் தற்போதுதான் இந்த துறைக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ‘ரெயில்வே போலீஸ் துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறேன். குறிப்பாக, ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் நடக்கும் திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், அதை ரெயில்வே போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்’ என்றார்.

முன்னதாக அவர் கொடைரோடு ரெயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர்மன்னா, இன்ஸ்பெக்டர் கீதாதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story