மதுரை நீர்மட்டம் உயர வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; காமராஜ் வலியுறுத்தல்
மதுரை நகரின் நீர்மட்டம் உயர வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தேசிய நதிகள் இணைப்புக்குழுவின் உயர்மட்ட உறுப்பினரும், நவாட் டெக் அமைப்பின் தலைவருமான ஏ.சி.காமராஜ் கூறினார்.
மதுரை,
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வைகை நீர்த்தேக்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வைகை ஆற்றில் தண்ணீர் வரவில்லை. பொதுவாக வைகை அணையில் இருந்து ஆறு மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது வைகையில் இருந்து பேரணை பேரணை வரை கால்வாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அந்த நீர் பெரியாறு பாசனத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீரின்றி போகிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடுமாடு போன்ற கால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதில்லை.
எனவே மதுரையில் செல்லூர் போன்ற பகுதிகளில் 1,000 அடியில் கூட தண்ணீர் இல்லை. எனவே ஆற்றில் தண்ணீர் விட வேண்டியது மிக மிக அவசியம். இதெல்லாம் அறிந்துதான் வைகை அணை கட்டும் போதே, பெரியாறு அணையின் பாசன நீரையும், வைகை ஆற்றின் வெள்ள நீரையும் மட்டும் தேக்க வேண்டும். வைகை ஆற்றின் இயற்கையான நீரோட்டத்தினை தடுத்து நீர் தேக்கி வைக்க கூடாது என காமராஜர் காலத்தில், வைகை அணை கட்டும்போதே அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தினால் வைகை ஆற்றில் நீரோட்டம் இருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கும். நீரோட்டம் இருந்தால் மழை பருவம் தவறாமல் பெய்யும். பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்த இந்த அரசாணையை பின்பற்றுவதை நிறுத்தி விட்டதால் மதுரை மட்டுமின்றி வைகை ஆறு செல்லும் அனைத்து ஊர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இயற்கையான நீரோட்டத்தை ஒரு ஆற்றில் தடுக்கும் போது அந்த ஆறு இறந்த நிலைக்குச் செல்கிறது என்று அர்த்தம். எனவே, அரசாணைப்படி ஆற்றுக்கும் தண்ணீர் வழங்கிட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மதுரை தண்ணீரின்றி இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.