ஜாதியை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் முக்கியப் பணியாகும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு


ஜாதியை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் முக்கியப் பணியாகும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
x
தினத்தந்தி 7 Nov 2017 5:00 AM IST (Updated: 7 Nov 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஜாதியை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் முக்கியப் பணியாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

மதுரை,

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய மாநாடு கடந்த 4–ந் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி மாநாட்டின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் பழங்காநத்தம் பகுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தேசிய குற்ற ஆவணப்படி தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 2013–ல் 33 ஆயிரம் பேர், 2014–ல் 44 ஆயிரம் பேர் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 2016–ம் ஆண்டு எவ்வளவு பேர் தாக்குதலுக்கு ஆளானார்கள் என்பதை அவர்கள் தெரிவிக்க மறுக்கிறார்கள். ஜாதியை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் முக்கியப் பணியாகும். இன்றைய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தான் தலித் ஒடுக்குமுறை முன்னணி எடுத்து செல்கிறது.

கேரளாவில் 4 வகையான சமூகம் இருந்தாலும் தலித் மக்களுக்கான திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தலித் குடும்பத்தில் மாணவர்கள் படிக்க வசதியில்லை என்றால் அவர்களை அரசு படிக்க வைக்கிறது. கேரளாவில் தலித் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதன் மூலமாக தந்தை பெரியாரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் நமது கடமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்து கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதைதொடர்ந்து 47 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story