அவினாசி, தெக்கலூர் பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை மாற்ற வேண்டும்
அவினாசி, தெக்கலூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அவினாசி தெக்கலூர் வெள்ளாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதி பொதுமக்கள் தெக்கலூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மிக பழமையான கட்டிடமாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சிறிது தூரத்தில் ரேஷன் கடைக்கான புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புதிய கட்டிடத்தில் ரேஷன் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு புதிய கட்டிடத்தில் ரேஷன் கடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சின்னச்சாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு தற்போது இலவச செட்டாப்பாக்ஸ் இணைப்பிற்கு ரூ.200 ஐ செலுத்துமாறு அறிவித்தது. ஆனால் எங்கள் முத்தணம்பாளையம் பகுதியில் செட்டாப்பாக்ஸ் இணைப்பிற்கு ரூ.2 ஆயிரம் வரை பொதுமக்களிம் முன்பணமாக வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும், முத்தணம்பாளையம், நெரிப்பெரிச்சல் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் சாலையின் ஒரங்களில் கொட்டப்படுவதால் நோய்கள் தாக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் கைகாட்டி புதூர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் எங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர் மிக குறைந்து விட்டது. நல்ல தண்ணீர் 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. இதனால் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சேகாம்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை. சாலைகள் மிகவும் மோசமானை நிலையில் உள்ளது. சாக்கடை கால்வாய்கள் இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் உள்ள பள்ளியிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகமும் சுகாதரமின்றியே காணப்படுகிறது. இதனால் எங்கள் குடியிருப்பு பகுதி பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க.23–வது வட்ட செயலாளர் அரசகாளை மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
உடுமலை நகராட்சிக்குட்பட்ட சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்முக தேர்வு கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி நடைபெற்றது. மற்ற பகுதிகளில் பணி ஆணை வழங்கிய நிலையில் உடுமலை நகராட்சி பகுதியில் மட்டும் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் காலதாமதம் செய்யாமல் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.