கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை சிதம்பரத்தில் 15 செ.மீ. பதிவானது
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 15 செ.மீ. பதிவானது. பெருமாள் ஏரி நிரம்பியதால் ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகள், வயல் வெளி பகுதிகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் நேற்று முன்தினம் மாலையில் பெய்ய தொடங்கிய மழை நேற்று காலைவரை விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் நேற்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவித்தது. இந்த நிலையில் பகலில் மழை ஓய்ந்து, வெயில் தலைகாட்ட ஆரம்பித்தது.
இதற்கிடையே தொடர்ந்து பெய்த மழையால் மஞ்சக்குப்பம், குண்டுஉப்பலவாடி சாலை, எஸ்.என்.நகர், திருமலைநகர், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, கீழ்செருவாய், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, தொழுதூர், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், குப்பநத்தம், விருத்தாசலம், வேப்பூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பில் தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் அருகே இருந்த புளியமரம் ஒன்று சென்னை–கும்பகோணம் காலையில் சாய்ந்து விழுந்தது. இதை நெடுஞ்சாலை, மின்சாரத்துறையினர் வெட்டி அகற்றினர்.
கடலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதி மக்கள் கடலூருக்கு வந்து செல்வதற்கு வசதியாக கெடிலம் ஆற்றின் குறுக்கே மண் பாலம் அமைத்திருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அந்த மண்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தினால் தற்காலிக பாலம் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கனமழையால் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரியும் நிரம்பி உள்ளது. 6½ அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 5½ அடியில் தண்ணீர் தேங்கி உள்ளது. என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வாலாஜா ஏரி பரவனாறு வழியாக ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் பூவானிக்குப்பம் மதகு வழியாக ஆயிரத்து 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட நீர் பூவானிக்குப்பம், சிந்தாமணிகுப்பம், ஆணையம்பேட்டை, ஆலப்பாக்கம், காயல்பட்டு வழியாக சென்று கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்தால், நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 15.4 செ.மீ. மழையும், குறைந்த பட்சமாக வானமாதேவியில் 10.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 55.69 மில்லி மீட்டர் மழை பெய்தது.