மாங்காடு அருகே போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் 4 பேர் கைது
மங்காடு அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் நெல்சன்.
பூந்தமல்லி,
மங்காடு அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் நெல்சன்(வயது 39). ஓவிய ஆசிரியர். இவர், கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் மாங்காடு போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆசிரியர் நெல்சனை சரமாரியாக தாக்கினர்.
அவரை போலீஸ் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றிய போது, ஆத்திரம் அடைந்த பொதுமக்களில் சிலர், போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் நொறுங்கியது.
இது தொடர்பாக போரூர் உதவி கமிஷனர் கண்ணன், மாங்காடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார், போலீஸ் வாகன கண்ணாடிகளை கல்வீசி நொறுக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின்(42), அஜித்குமார்(21), மணிகண்டன்(24), தாமஸ்(35) ஆகிய 4 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.