செங்குன்றம் அருகே நிச்சயதார்த்த விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு


செங்குன்றம் அருகே நிச்சயதார்த்த விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Nov 2017 3:15 AM IST (Updated: 7 Nov 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே நிச்சயதார்த்த விழாவில் 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த உப்பரப்பாளையம் சாலை காந்தி தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்(எ)பெரியசாமி (வயது 43). லாரி டிரைவர். இவரது மகள் கயல்விழி. இவருக்கும் இவரது உறவினர் ஒருவருக்கும் நேற்று முன்தினம் இரவு திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட உறவினர்கள் அதன்பின்பு தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.

அதன்பின்பு இரவு 9.30 மணி அளவில் பெரியசாமியும், அவரது மனைவி நரசம்மாள் (40) மற்றும் பெரியசாமியின் மாமா அருள்தாஸ் (54) ஆகியோர் வீட்டின் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இதில் 3 பேருக்கும் தலை, உடலில் சில இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பெரியசாமியின் மகள் கயல்விழியும், செங்குன்றத்தை அடுத்த முத்திரிபாளையத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தான் காதலித்த பெண் வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் தனது நண்பர்களுடன் வந்து 3 பேரையும் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி சென்ற 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story