புதுவையில் இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமி விருப்பம்


புதுவையில் இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமி விருப்பம்
x
தினத்தந்தி 7 Nov 2017 5:00 AM IST (Updated: 7 Nov 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என முதல்–அமைச்சர் நாராயணசாமி விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3–ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் மொத்தம் 127 அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அரசு செயலர் சுந்தரவடிவேலு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:–

உலக அளவில் பல்வேறு துறைகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இதனை மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

சூரியனுக்கு ஆதித்யா என்ற பெயரில் விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் புதுவையில் இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. எனவே வாய்ப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை இயக்குனர்கள் சோமசுந்தரம், மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கொல்பெர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை இயக்குனர் கிருஷ்ணராஜூ நன்றி கூறினார்.


Next Story