கடலில் கப்பல் மூழ்கியதில் மாயமான புன்னக்காயல் மாலுமியை உடனே மீட்க வேண்டும்


கடலில் கப்பல் மூழ்கியதில் மாயமான புன்னக்காயல் மாலுமியை உடனே மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

கடலில் கப்பல் மூழ்கியதில் மாயமான புன்னக்காயல் மாலுமியை உடனே மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.

புன்னக்காயல் தெற்கு தெருவை சேர்ந்த பெவின் மற்றும் ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த மாதம் 13-ந் தேதி 26 மாலுமிகளுடன் சென்ற எமரால்டு ஸ்டார் என்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கியது. இதில் 16 பேர் மீட்கப்பட்டனர். மீதி 10 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. அதில் புன்னக்காயலை சேர்ந்த தோமாஸ் என்பவரும் ஒருவர். இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேசி, துரிதமாக 10 பேரையும் மீட்க நடவடிக்கை வேண்டும் என்று கூறி இருந்தனர்.

கோவை புலியாகுளத்தை சேர்ந்த சந்திரா என்பவர் கொடுத்த மனுவில், என்னுடைய பூர்வீக வீடு திருச்செந்தூர் டவுன் மேலரதவீதியில் உள்ளது. எனது மகன் ரவிகுமார், திருச்செந்தூரை சேர்ந்த ஒருவரிடம் கடனுக்கு பணம் வாங்கி இருந்தார். 2015-ல் அந்த நபர், வட்டிக்கு மேல் வட்டி போட்டு ரூ.31 லட்சம் தர வேண்டும் என்று எனது மகனை மிரட்டினார். இதனால் அந்த தொகைக்கு என்னுடைய நிலத்தை அவர் பெயரில் எழுத்தி கொடுத்தேன். மேலும் அந்த நபர், எனது வீடு, நிலம் அனைத்தையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எஸ்.இ.இ. டி.வி. என்ற அமைப்பின் மூலம் கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறோம். அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் தொடங்கப்பட்ட போது, அதில் பதிவு செய்து மாதம் தோறும் சந்தா செலுத்தி வருகிறோம். மத்திய அரசின் டிஜிட்டல் முறையை கேபிள் டி.வி.யில் முறைப்படுத்த மாநில அரசு கால அவகாசம் பெற்று உள்ளது.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அரசு கேபிள் டி.வி.யில் கட்டண சேனல்கள் நிறுத்தப்பட்டன. இதனால் எங்களுடைய கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் முக்கிய சேனல்களை பார்க்க முடியவில்லை. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செட்-டாப் பாஸ் வழங்கவும் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள நிவாரண தொகை விவரம் பெயர் பட்டியலை, மாவட்டத்தில் உள்ள அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம், இணையதளம், வங்கிகளின் தகவல் பலகையில் ஒட்டியும், கடிதம் மூலமும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு உரங்கள், பூச்சி மருந்துகள், விவசாய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் பொது செயலாளர் சந்திரபோஸ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 35-வது வார்டு பகுதியில் உள்ள பூங்காக்களில் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் மத்திய மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் ரூஸ்வெல்ட் ஜெபராஜ், அவை தலைவர் செல்லத்துரை கொடுத்த மனுவில், நெடுஞ்சாலை துறை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக மின் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன. எனவே அந்த பகுதியில் முறையாக மின் விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். உப்பாற்று ஓடை புதிய பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் நகரை சேர்ந்த மீனவர் முனியசாமி என்பவர் கொடுத்த மனுவில், நான் திருச்செந்தூர் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த சிலர் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று கூறி என்னை தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தூத்துக்குடி- நெல்லை மாவட்ட பம்பு செட் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், பாபநாசம், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து திருச்செந்தூர் தாலுகா உடன்குடி தாங்கைக்குளம், சாத்தான்குளம் தாலுகா வைரவன் தருவை படுக்கப்பத்து படுகை மற்றும் தருவை குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் பகுதியில் தனியார் காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றும், சாயர்புரத்தில் உள்ள கல்லூரியில் படித்தும் வரும் மாணவிகள் நாங்கள் பள்ளியில் பிளஸ்-2 படித்த போது எங்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்-டாப் வழங்கப்படவில்லை. அதை தற்போது, வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். 

Next Story