சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பட்டதாரி-4 வயது சிறுவன் பலி


சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பட்டதாரி-4 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பட்டதாரி, 4 வயது சிறுவன் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டம் தேவூர் அருகே காவேரிப்பட்டி ஊராட்சி ஒக்கிலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). எம்.ஏ., பி.எட். படித்து உள்ளார்.

பட்டதாரியான இவருக்கு கவிதா (24) என்ற மனைவியும், வைஷ்ணவி (7) என்ற மகளும், மவுலீஸ்வரன் (5) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி 2-ம் வகுப்பும், மவுலீஸ்வரன் எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக செல்வகுமார் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஈரோடு, அந்தியூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணம் அடையவில்லை. பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு செல்வகுமார் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் திவ்யா. இவரது கணவர் சுரேஷ். இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா தனது மகள் நிஷிபா (வயது 6), மகன் கபிலேஷ் (4) ஆகியோருடன் கோனூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கபிலேஷிற்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு பரமத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கபிலேஷிற்கு திடீர் என உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக கபிலேஷை அவனது குடும்பத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் அருந்ததியர் காலனி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்காமலும், நோய் தடுப்பு பணியில் ஈடுபடாததாலும்தான் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story