ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மாணவர்கள் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு


ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மாணவர்கள் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 7 Nov 2017 3:45 AM IST (Updated: 7 Nov 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் நள்ளிரவில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் கல்லூரி மாணவர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை சோலைபுரத்தை சேர்ந்தவர் முபாரக் கனி. இவர் அம்பை பூக்கடை பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு திருமணத்துக்காக குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் இரவில் அவரது வீட்டுக்கு மர்ம நபர்கள் வந்து, வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சத்தம் கேட்டு சுதாரித்துக் கொண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுபற்றி அம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை சுற்றி வளைத்தனர்.

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

போலீசார் வந்ததை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸ்காரர் ராமர் பெருமாள் (வயது 35) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்த போது போலீசாரும், பொதுமக்களும் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்தனர்.

மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ராமர் பெருமாள், அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்கள்

பிடிபட்ட 2 பேரையும் போலீசார் அம்பை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாஞ்சோலையை சேர்ந்த லிவின், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த வினோத் என்பதும், தப்பி ஓடியவர்கள் குமுளியை சேர்ந்த ராபின், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மணிசுந்தர்ராஜா, மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த குகன் என்பதும் தெரியவந்தது.

போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர், தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டு சம்பவங்களில் தொடர்பா?

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலைபுரம் பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. மேலும் ஊர்க்காடு பகுதியில் ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இதே அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் கல்லூரி மாணவர்கள் கொள்ளையடிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story