ஆயத்தஆடை தொழிற்சாலை ஊழியர் மாயமான வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில், ஆயத்த ஆடை தொழிற்சாலை ஊழியர் மாயமான வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில், ஆயத்த ஆடை தொழிற்சாலை ஊழியர் மாயமான வழக்கில் அதிரடி திருப்பமாக தாம்பத்தியத்தில் ஈடுபடாததால், அவரை கொன்று உடலை சாக்கடை கால்வாயில் வீசியது அம்பலமாகி உள்ளது.
இதுதொடர்பாக தொழிற்சாலை ஊழியரின் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கணவரை காணவில்லை என புகார்
பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லவகுசாநகரை சேர்ந்தவர் மதுசூதன்(வயது 30). இவரது மனைவி நீலா (27). மதுசூதன் தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி தனது கணவர் மதுசூதனை காணவில்லை என ராஜகோபால்நகர் போலீஸ் நிலையத்தில் நீலா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுசூதனை தேடிவந்தனர். ஆனால் மதுசூதன் பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
இதற்கிடையில், நீலாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, நீலாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். அவரிடம் துருவி, துருவி நடத்திய விசாரணையில் தனது கணவர் மதுசூதனை கள்ளக்காதலன் பிரதீப்புடன் சேர்ந்து கொலை செய்ததை நீலா ஒப்புக் கொண்டார். மேலும் நீலாவிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை
அதாவது மதுசூதனுக்கும், நீலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆனதில் இருந்து நீலாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் மதுசூதன் இருந்துள்ளார். இதன் காரணமாக நீலாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் டிரைவரான பிரதீப் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள், மதுசூதன் வேலைக்கு சென்ற பிறகு தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் மதுசூதன் தாம்பத்தியத்தில் ஈடுபடாததால், அவருடன் சேர்ந்து வாழ நீலா விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இதுபற்றி கள்ளக்காதலன் பிரதீப்பிடம் நீலா கூறியுள்ளார். உடனே மதுசூதனை கொலை செய்துவிட்டு, 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி மதுசூதனை பிரதீப் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவருக்கு பிரதீப் மது வாங்கி கொடுத்துள்ளார்.
கால்வாயில் உடல் வீச்சு
குடிபோதையில் இருந்த மதுசூதனை மினிலாரியில் கெங்கேரிக்கு பிரதீப் அழைத்து அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தனது நண்பர்களான ரஞ்சித், ஹரிபிரசாத் ஆகியோருடன் சேர்ந்து மதுசூதனின் கழுத்தை நெரித்து பிரதீப் கொலை செய்துவிட்டு, உடலை கெங்கேரியில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர். மதுசூதனை கொலை செய்தது பற்றி உடனடியாக நீலாவை செல்போனில் தொடர்பு கொண்டு பிரதீப் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் (அக்டோபர் 13-ந் தேதி) ராஜகோபால்நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது கணவரை காணவில்லை என்று கூறி நீலா புகார் அளித்து நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
அதைத்தொடர்ந்து, நீலா, அவரது கள்ளக்காதலன் பிரதீப், இவரது நண்பர்களான ரஞ்சித், ஹரிபிரசாத்தை போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் 4 பேர் மீதும் ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story