கம்பளா போட்டிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


கம்பளா போட்டிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 7 Nov 2017 3:53 AM IST (Updated: 7 Nov 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

கம்பளா போட்டிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுபற்றி மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களில் கம்பளா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதாவது இருபுறமும் எருமை மாடுகளை பூட்டி சேற்றில் ஓடவிடுவது தான் இந்த போட்டியின் முக்கிய அம்சம். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுவை தொடர்ந்து இந்த போட்டிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இதையடுத்து கால்நடை சட்டத்தில் திருத்தம் செய்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே போல் கர்நாடகத்திலும் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு சமீபத்தில் தான் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து கம்பளா போட்டிக்கும் இருந்த தடை நீங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது

இந்த நிலையில் கர்நாடக அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா‘ அமைப்பு மனு தாக்கல் செய்தது. அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பீட்டா அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல், கம்பளா போட்டிக்கு அனுமதி வழங்கிய கர்நாடக அரசின் சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யுமாறு வாதிட்டார்.

ஆனால் அதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

Next Story