வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் குடும்பத்தினருடன் ஆஜர்


வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் குடும்பத்தினருடன் ஆஜர்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:56 AM IST (Updated: 7 Nov 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் குடும்பத்தினருடன் ஆஜரானார்.

பெங்களூரு,

குஜராத்தில் இருந்து, டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்க குஜராத் காங்கிரசை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து அவர்களை அக்கட்சி பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அதே ஓட்டலில் அவர்களுடன் தங்கி இருந்து வந்தார்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சோதனையை மத்திய அரசு நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. தொடர்ந்து 3 நாட்கள் இந்த சோதனை நடைபெற்றது.

ரூ.400 கோடிக்கு சொத்து

அந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.400 கோடிக்கு சொத்து ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக மந்திரி டி.கே.சிவக்குமார் ஏற்கனவே வருமான வரி அதிகாரிகள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் இதுகுறித்து மேலும் விசாரணைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் 6-ந் தேதி(நேற்று) ஆஜராகும்படி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரி அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

அதன்படி மந்திரி டி.கே.சிவக்குமார் தனது மனைவி, மகள், தாயார் ஆகியோருடன் பெங்களூரு கப்பன்பூங்கா அருகே உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். மேலும் டி.கே.சிவக்குமாரின் நண்பர்கள் சிலரும் ஆஜராகினர். மதியம் 2.45 மணிக்கு வருமான வரி அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், மாலை 5 மணிக்கு விசாரணையை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர். 2¼ மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

15 பேரிடம் வாக்குமூலம்

கணக்கில் வராத ரூ.400 கோடி சொத்து குறித்து டி.கே.சிவக்குமார் உள்பட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் வருமான வரி அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். இந்த விசாரணைக்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை அடுத்து நான் ஏற்கனவே வருமான வரி அதிகாரிகள் முன்பு ஆஜரானேன். இப்போது குடும்பத்தினருடன் ஆஜராகும்படி எனக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினர். அதன்படி எனது மனைவி, மகள், தாயாருடன் நான் இன்று(நேற்று) ஆஜரானேன். மேலும் எனது நண்பர்களும் ஆஜராகினர். 15 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

உத்தரவை மீற முடியாது

அதிகாரிகள் எங்களிடம் தனித்தனியாக சில கேள்விகளை கேட்டு விவரங்களை பெற்றனர். நான் சட்டத்தை மதிப்பவன். பொறுப்பான மந்திரி பதவியில் இருக்கிறேன். அதனால் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். என்னை அதிகாரிகள் உரிய கவுரவத்துடன் நடத்தினார்கள். தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராக வேண்டி இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். நாங்கள் ஆஜராக தயாராக இருக்கிறோம்.

அரசியல் ரீதியாக என்னை அடக்க இந்த விசாரணை நடத்தப்படுகிறது என்று நான் சொல்ல மாட்டேன். நான் இன்று(நேற்று) கட்சி கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தேன். அதை ரத்து செய்துவிட்டு இங்கு ஆஜரானேன். விசாரணை நடத்த வருமான வரி அதிகாரிகளுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. அதனால் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவை மீற முடியாது.

மூடிமறைக்க விரும்பவில்லை

எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நான் எதையும் மூடி மறைக்க விரும்பவில்லை. அதிகாரிகள் கேட்ட அனைத்து விவரங்களையும் நான் கொடுத்தேன். வருமான வரித்துறை மட்டுமின்றி அமலாக்கத்துறை உள்பட எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். எந்த விசாரணையையும் கண்டு நான் அஞ்ச மாட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். 


Next Story