பாந்திராவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 22 வாலிபர்கள் கைது
பாந்திராவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 22 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
மும்பையில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பாந்திரா கிழக்கு கலாநகர் பகுதியில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் பாந்திரா- ஒர்லி கடல்வழி மேம்பாலம் நோக்கி செல்லும் சாலையில் செல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் அங்குள்ள போக்குவரத்து போலீஸ் அலுவலகம் அருகே சென்று கண்காணித்தனர்.
22 பேர் கைது
அப்போது பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வீதம் 13 மோட்டார் சைக்கிள்களில் 26 பேர் வந்து கொண்டிருந்தனர்.
இதில், 11 மோட்டார் சைக்கிள்களில் வந்த 22 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 4 பேர் தப்பிஓடி விட்டனர். கைதானவர்களில் 4 பேர் தங்களை கைது செய்த கோபத்தில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாகவும் அவர்கள் மீது போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story