இளைஞர்கள் தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு


இளைஞர்கள் தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:15 AM IST (Updated: 8 Nov 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தொழில் மையம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலையில்லா பிரச்சினையை மட்டுப்படுத்தவும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் குறிப்பாக படித்த வேலையில்லா இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற வகுத்த திட்டமே தொழில் முனைவோர் ஆகும். தமிழகத்தில் எங்கும் இல்லாத சுற்றுப்புற சூழல் நீலகிரி மாவட்டத்தில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்துக்கு வருமானம் தரக்கூடிய புதிய தொழிலை இளைஞர்கள் தேர்ந்தெடுத்து தொழில் தொடங்க வேண்டும். நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால், இங்கு கிடைக்கக்கூடிய தாவரங்கள், பூக்கள், இலைகளை சேகரித்து புதிய வகை ஆயில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரலாம். அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க செய்து, இன்றைய இளைஞர்கள் நாளைய தொழில் அதிபர்களாக ஆகலாம்.

நீலகிரியில் தொழில் தொடங்க உள்ள இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். எனவே, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி இளைஞர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், பயிற்சி பெற்ற 28 பேருக்கு சான்றிதழ்கள், புதிதாக தொழில் தொடங்குவதற்கு தலா ஒரு நபருக்கு ரூ.3 லட்சம் வீதம் 3 பேருக்கு ரூ.9 லட்சத்திற்கான காசோலைக்கான ஆணைகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அறிவழகன், வங்கி மேலாளர்கள், புதிய தொழில் முனைவோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story