பிரசவித்த பெண்ணிடம் குழந்தையை காண்பிக்க பணம்: பாளை.அரசு ஆஸ்பத்திரியில் 2 செவிலிய உதவியாளர்கள் பணியிடை நீக்கம்


பிரசவித்த பெண்ணிடம் குழந்தையை காண்பிக்க பணம்: பாளை.அரசு ஆஸ்பத்திரியில் 2 செவிலிய உதவியாளர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Nov 2017 2:00 AM IST (Updated: 8 Nov 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணிடம் குழந்தையை காண்பிக்க பணம் கேட்ட 2 செவிலிய உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டீன் சித்தி அத்திய முனவரா உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை,

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணிடம் குழந்தையை காண்பிக்க பணம் கேட்ட 2 செவிலிய உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டீன் சித்தி அத்திய முனவரா உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களிடம் பணம் வசூல்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பொது மருத்துவம், இருதய நோய் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, விபத்து பிரிவு, மூட்டு அறுவை சிகிச்சை பரிவு, மகளிர் நோய் மற்றும் மகபேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்கு வருகின்ற நோயாளிகளிடம் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகின்ற தற்காலிக சுகாதார பணியாளர்கள், வண்டி தள்ளுகின்ற பணியாளர்கள் பணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இறந்தவர்களின் உடலை வாகனத்தில் ஏற்றுவதற்கும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ஒரு வார்டில் இருந்து மற்றொரு பகுதிக்கு தள்ளு வண்டியில் தள்ளிக்கொண்டு செல்வதற்கும் பணம் வசூலிக்கப்படுவதாகவும், குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்ற குழந்தைகளை உறவினர்களை பார்க்க அனுமதிப்பதற்கும் பணம் வசூலித்து வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

பிரவித்த குழந்தைகளை காண்பிக்க பணம்

மேலும் இங்கு பிரசவத்துக்கு வருகின்ற கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை அந்த பெண்ணிடமும், உறவினர்களிடமும் காண்பிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக 2 செவிலிய உதவியாளர்கள் பணம் கேட்பதாக கூறி அந்த பணியாளர்கள் போட்டோவுடன் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த பதிவை பார்த்த டீன் சித்தி அத்திய முனைவரா, துணை முதல்வர் ரேவதி ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். சமூக வலைதளங்களில் வெளியான இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

பணியிடை நீக்கம்

விசாரணையில் அவர்களது பெயர் பேச்சியம்மாள், செல்வி என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டீன் சித்தி அத்திய முனவரா உத்தரவிட்டார்.

அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் ஏழை, எளிய மக்களையும், அவர்களது உறவினர்களையும் காப்பாற்ற டீனின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story