மதுரை ஒத்தக்கடை பகுதியில் டயர் குடோனில் பயங்கர தீ விபத்து
மதுரை ஒத்தக்கடை பகுதியில் டயர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை,
மதுரை–மேலூர் சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியை சேர்ந்தவர்கள் ஒத்தக்கடை பகுதியில் உள்ள மூடப்பட்ட ஒரு தியேட்டரை குடோனாக பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு பழைய மற்றும் புதிய டயர்கள், டயர் உற்பத்திக்கு தேவையான ரப்பர்கள் மற்றும் கழிவு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் அந்த குடோனில் திடீரென்று தீப்பற்றியது. அந்த தீ மளமளவென்று குடோன் முழுவதும் பரவியது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணக்குமார், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சுப்பிரமணியன், தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. அங்கு எரிந்த தீயை அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்ததால் மற்ற இடங்களில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. அவர்கள் தொடர்ந்து 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த சுமார் 150 டன் டயர்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என தெரிகிறது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதற்கிடையில் குடோனுக்கு அருகில் இருந்த 5–க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் வெப்பம் தாங்காமல் விரிசல் விட்டு சேதமடைந்தது. உடனே அங்கிருந்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தினார்கள்.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை. ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.