ரோந்து பணியில் ஈடுபட்டபோது 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் விழுந்து போலீஸ்காரர் பலி


ரோந்து பணியில் ஈடுபட்டபோது 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் விழுந்து போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 8 Nov 2017 4:45 AM IST (Updated: 8 Nov 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

ரோந்து பணியில் ஈடுபட்டபோது 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் ஆற்றுக்குள் பாய்ந்ததில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் காவல் துறையின் 24 மணி நேரமும் இயங்கும் ஜீப்பில் தினமும் 2 போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். இவர்கள் ஜீப்பில் அரூரில் இருந்து மஞ்சவாடி கணவாய் வழியாகவும், ஊத்தங்கரை, அனுமன்தீர்த்தம் வரையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தர்மபுரி ஆயுதப்படையில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் (வயது 33) ஆகிய 2 பேரும் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவர்கள் நள்ளிரவு அரூரில் இருந்து சேலம் சாலையில் அ.பள்ளிப்பட்டி வரை ரோந்து சென்றனர். பின்னர் அவர்கள் ரோந்து ஜீப்பில் அரூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இந்த ஜீப்பை போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் ஓட்டி சென்றார்.

அப்போது பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் இவர்கள் ரோந்து சென்றபோது திடீரென பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஜீப் மோதியது. இதில் சுவரை உடைத்து கொண்டு 35 அடி உயர பாலத்தில் இருந்து ஜீப் ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் அரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், அ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து விபத்தில் இறந்த போலீஸ்காரர் ராமகிருஷ்ணனின் உடலை, போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் வரவழைக்கப்பட்டு போலீஸ் ஜீப் மேலே கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story