சிதம்பரம் அருகே தாமதமாக வந்த ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சிதம்பரம் அருகே தாமதமாக வந்த ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை,
விழுப்புரத்தில் இருந்து கடலூர், புதுச்சத்திரம், சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு தினசரி காலை, மதியம், மாலை வேளைகளில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பயணிகள் ரெயிலில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சத்திரம் பகுதிகளில் இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ– மாணவிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த ரெயில் காலை நேரத்தில் புதுச்சத்திரம் ரெயில் நிலையத்துக்கு தாமதமாக வந்தது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 7.20 மணிக்கு வரவேண்டிய பயணிகள் ரெயில் தாமதமாக 8 மணிக்கு புதுச்சத்திரத்துக்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் கடலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி சரியான நேரத்துக்கு ரெயில் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதை ஏற்ற மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அந்த ரெயிலில் ஏறி கல்லூரிக்கு சென்றனர். இதனால் பயணிகள் ரெயில் புதுச்சத்திரத்தில் இருந்து காலை 8.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் புதுச்சத்திரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.