பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. திருவள்ளூர், ஈக்காடு, புட்லூர், அரண்வாயல், மணவாளநகர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு ,கூவம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றும் காலையில் இருந்தே மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதே போல திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட தேவாநகர், சிவம் நகர், கிருஷ்ணாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை காரணமாக சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதில் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பெரும்பாலான மக்கள் மழையின் காரணமாக தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
குடிசைகள் சேதம்
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வசந்தம் நகர், இருளர் காலனியில் பலத்த மழையின் காரணமாக 30-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களின் குடிசைகள் சேதம் அடைந்தன. இதனை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தங்களுக்கு தங்க மாற்று இடம் வழங்கி குடிசைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story