கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?


கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?
x
தினத்தந்தி 8 Nov 2017 2:30 AM IST (Updated: 8 Nov 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளின் நிலை குறித்து சித்தராமையாவால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என்று எடியூரப்பா கூறினார்.

ஹாசன்,

கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளின் நிலை குறித்து சித்தராமையாவால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என்று எடியூரப்பா கூறினார்.

மாற்றத்திற்கான பயணம்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜனதா கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் மாற்றத்திற்கான பயணம் (பரிவர்த்தன யாத்திரை) என்ற பெயரில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை நேற்று ஹாசன் டவுனிற்கு வந்தடைந்து.

மேலும் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் எடியூரப்பா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணனை போல தூங்கி கொண்டிருந்தது. அப்போது மாநிலத்தில் நடந்து வந்த எந்த வளர்ச்சி பணிகளையும் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆட்சி முடிய சில மாதங்களே உள்ள நிலையில் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தும், அடிக்கல் நாட்டியும் வருகின்றனர்.

மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருவதாக சித்தராமையா கூறிவருகிறார். மேலும் கலப்பு திருமணம் புரியும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண உதவி தொகையாக வழங்கி வருவதாக கூறி வருகிறார். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கலப்பு திருமணங்கள் நடந்துள்ளது என்ற தகவலை மாநில அரசு வெளியிட தயாரா?.

வெள்ளை அறிக்கை...

கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிட மக்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் வெறும் ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே ஆதிதிராவிட மக்களுக்காக செலவிடப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது. இதுதான் ஆதிதிராவிட மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசா?. கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன சாதனை படைத்துள்ளது? என்பது குறித்தும், கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளின் நிலை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட சித்தராமையாவால் முடியுமா?.

கர்நாடகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் கெட்டு போய் உள்ளது. குறிப்பாக பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதுதான் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் சாதனை.

ஊழல் தடுப்பு படையை...

மாநிலத்தில் லோக் அயுக்தாவிற்கு பதிலாக ஊழல் தடுப்பு படையை மாநில அரசு உருவாக்கி உள்ளது. அந்த அமைப்பை பயன்படுத்தி சித்தராமையா தனது மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார்களை ஒன்றில்லாமல் செய்து வருகிறார். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் அந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பொதுகூட்டத்தில் ஷோபா எம்.பி., பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா, சி.டி.ரவி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் யோகா ரமேஷ் உள்பட ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story