எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுகிறது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுகிறது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2017 2:45 AM IST (Updated: 8 Nov 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுகிறது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுகிறது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

என்னை கண்காணிக்கிறார்கள்

மந்திரி எம்.பி.பட்டீல் தனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக கூறி இருக்கிறார். எனது தொலைபேசியும் தினமும் ஒட்டு கேட்கப்படுகிறது. நான் எங்கு சென்றாலும் சிலர் என்னை கண்காணிக்கிறார்கள். தொலைபேசியை ஒட்டுகேட்க சில அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. இதை யார் ஒட்டு கேட்கிறார்கள் என்று எப்படி சொல்வது.

வருமான வரி சோதனையில் அமலாக்கத்துறை எனது சொத்துகளை முடக்க திட்டமிட்டுள்ளதாக வேண்டுமென்றே சிலர் தகவல்களை பரப்புகிறார்கள். நான் கனகபுரா பாறையில் இருந்து வந்தவன். பாறை மீது மோதினால் தலை தான் உடையும். பாறைக்கு ஒன்றும் ஆகாது. ரூபாய் நோட்டு ரத்தால் லட்சக்கணக்கான மக்கள் வேலையை இழந்தனர்.

ஊழல் குறையவில்லை

இதை எதிர்த்து நாளை(அதாவது இன்று) காங்கிரஸ் சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. கருப்பு பணத்தை மோடியால் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. ஊழல் குறையவில்லை. பயங்கரவாதத்தை தடுக்க முடியவில்லை. ரூபாய் நோட்டு ரத்தால் 150 பேர் மரணம் அடைந்தனர். சிறிய தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

திப்பு சுல்தான் ஜெயந்தி வி‌ஷயத்தில் சிலர் தேவை இல்லாமல் அரசியல் செய்கிறார்கள். திப்பு சுல்தான் பற்றி நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தே கூறியுள்ளார். திப்பு சுல்தான் என்ன செய்தார் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு மிக தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story